தீவிரவாதம் தீர்வை தருமா?
“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)
Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.
‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.
‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.
‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.
மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.
அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’
நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!
இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக் கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.
இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

No comments:
Post a Comment