Tuesday, 30 April 2013

60 நொடி ... ஆர் யூ ரெடி

"60 நொடி ... ஆர் யூ ரெடி ? " என புதிதாக ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். முன்பு 2 பேர் ஓரணியாக இருந்து, இன்னொரு ஜோடி எதிரில் இருந்து விளையாடிய நிகழ்ச்சி தான்...இப்போது தனித்தனியே விளையாடுகிற மாதிரி மாறி வந்துள்ளது



60 நொடிகளில் குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை முடிக்க வேண்டும். முடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவர். முடிக்காதவர்களில் ஒருவர் அவுட் ஆகி வெளியேறுவார். 

10 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளுக்கு 60 நொடி தான் ஆடுகிறார்கள். ஆக 10 நிமிஷத்தில் கேம் முடிஞ்சுடும். அப்புறம் எப்படி ஒரு மணி நேரம் இழுக்குறாங்க..? அதுக்கு தான் DD போன்ற ஆட்களை வைத்து ஏதாவது பேச வைக்கிறார்கள். 

தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !

நல்ல நிகழ்ச்சி - மக்கள் தொலை காட்சியில் திருக்குறள் 

மக்கள் தொலை காட்சியில் தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தொலைபேசியில் அவர்கள் டிவிக்கு கூபிடுபவர்களுக்கு ஒரு திருக்குறளின் முதல் வார்த்தை சொல்லி அந்த குறள் முழுமையும் சொல்ல சொல்கிறார்கள். வீட்டில் இருப்போரிடம் கேட்டு கொள்ள அனுமதித்தாலும் நம் மக்கள் எளிதான திருக்குறளை கூட தவறாகவே சொல்கிறார்கள். மக்கள் தொலை காட்சி சத்தமின்றி தமிழ் குறித்த சில நல்ல நிகழ்சிகள் வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது 

ஐ. பி. எல் கார்னர் 

சென்னை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது வலுவான நிலையில் - பாயிண்ட்டில் நம்பர் -1 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் நடக்கும் மேட்ச்களில் மறுபடியும் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது .. நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி! 

அவுட் ஆப் பார்ம் முரளி விஜய்யை எடுத்து விட்டு சாகாவை டீமில் எடுத்தது நன்கு வொர்க் அவுட் ஆனது.

கொல்கத்தா - சென்ற முறை பைனலில் சென்னையை வென்றது. அதற்கு பதிலடி தரும் விதமாய் இம்முறை 2 முறை கொல்கத்தாவுடன் ஆடி - 2 முறையும் சென்னை எளிதில் வென்றது. 2012-ல் கோப்பை வென்ற கொல்கத்தா செமி பைனல் செல்ல நாக்கு தள்ளி கொண்டு முழிக்கிறது. 

டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும். 

சீரியல் பக்கம்: விஜய் டிவி யின் " ஆபிஸ் " 

இந்த சீரியலில் வர்ற மாதிரி ஆபிஸ் எந்த ஊரில் இருக்குன்னு தெரியலை. சதா சர்வ காலமும் வேலையே செய்யாமல் பேசி கிட்டே இருக்காங்க. லவ் பண்றாங்க.பழைய காதல் பத்தி இழு - இழுன்னு இழுத்து சொல்றாங்க. ஹீரோ- ஹீரோயின் சீட் அல்லது காண்டீனில் தான் சீரியல் முழுக்க நகருது ! ஆபிஸ் என்கிற நல்ல களத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் செய்துள்ளனரே என்று தான் கடுப்பா வருது (வீட்டம்மணி மாற்றி மாற்றி பார்ப்பதால் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு ) 

விஜய் அவார்ட்ஸ் 

விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் முன் - அதற்கான Pre Cursor விழாவே சற்று கிராண்டாக நடத்தி வருகிறார்கள் விஜய் டிவியில். பல இயக்குனர்கள்- நடிகர் நடிகைகளை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்டு, சில பின்னணி பாடகர்கள் பாடி - ஆடி அமர்க்களப்படுது ! இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் ! வழக்கம் போல் - விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ 

*****************

மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிக்களும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன. இணையத்தில் கிடைத்த வரை ஒரு சிறு தொகுப்பு இதோ 

விஜய் டிவி

7.30 AM - சொன்னா புரியாது - சினிமா ரெவியூ 
8.00 AM - 3 பேர்; 3 காதல் சினிமா சிறப்பு பார்வை
8.30 AM - சூது கவ்வும் - சினிமா சிறப்பு பார்வை
10 AM - அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
11 AM - நண்பன் - திரைப்படம்
3 PM - என் தேசம் என் மக்கள்
4.30 P M - எதிர் நீச்சல் சினிமா சிறப்பு பார்வை
5.00 P M - கும்கி - திரைப்படம்

சன் டிவி

2.00 P M - மங்காத்தா - திரைப்படம் 
6.00 P M - ஏழாம் அறிவு - திரைப்படம்

ஜி தமிழ்

10 AM சமர் திரைப்படம்

கலைஞர் டிவி 

10 AM புத்தகம் திரைப்படம்
6 P M பையா திரைப்படம்
9 P M சூது கவ்வும் திரைப்படம் ஒரு பார்வை
9.30 P M நான் ராஜாவாக போகிறேன் திரைப்படம் ஒரு பார்வை
10 P M யாருடா மகேஷ் திரைப்படம் ஒரு பார்வை
10.30 P M சும்மா நச்சுன்னு இருக்கு (பவர் ஸ்டார் படம்) ஒரு பார்வை

Sunday, 24 February 2013


வாய் விட்டு சிரிங்க..





1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்.

பொன்விழா கண்ட கமல்..

                               


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

வாய் விட்டு சிரிங்க...




தயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு
நடிகர்-அப்படியா
தயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை

2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..
அவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க

3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..
அவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்

4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்
இயக்குநர்-என்ன போட்டி வைக்கலாம்
தயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்

5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்
துறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..
துறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்

6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..
தலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே
ஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.

சிரிப்போம்..சிரிக்க வைப்போம்..(ஒரு பக்கக் குறிப்புகள்)




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

நான் படித்த அருமையான வரிகள்




1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...

சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?

சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?

ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கோடிக்கணக்கில் சொத்து. பல இடங்களில் தோட்டங்கள் பண்ணைகள்.

அவருக்கு 48 வயதில் உடல் நலமில்லாமல் போய் விட்டது. செலவழித்து வைத்தியம் பார்த்தும் பயனில்லாமல் போய் விட்டது. ஜாதகத்தைப் பார்த்த இரண்டொரு ஜோதிடர்களும் நீங்கள் ஐம்பது வயதைத் தாண்டுவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.

உடனே அந்த மனிதர் ஒரு முடிவிற்கு வந்து, அதைச் செய்ல படுத்தும் முனைப்பில், உயில் ஒன்றை எழுதி அதைப் பதிவு செய்தும் வைத்து விட்டார். அத்துடன் அதன் பிரதியை தன் நண்பர்கள் இருவரிடம்  (in closed cover) கொடுத்து விட்டார்

எதிர் பார்த்தபடியே அடுத்து வந்த ஆறாவது மாதம் மனிதர் காலமாகி விட்டார்.

அதற்குப் பிறகு என்ன ஆனது?

இப்போது அது முக்கியமில்லை.

மனிதர் உயிலில் என்ன எழுதியிருந்தார்?

வாருங்கள், அதைப் பார்ப்போம்!

இருபத்தைந்து பக்க உயிலில் இருந்த முக்கியமான சாராம்சங்கள்:

1. என் மனைவி கோமதிக்கு நகைகளின் மேல் தீராத காதல். அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்து சென்னையில் உள்ள பெரிய நகைக் கடையில் கொடுத்து, அவள் விரும்பும் நகைகளை அந்தப் பணத்தின் மூலம் வாங்கிக் கொடுக்க வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக் கூடாது. அத்துடன் அடையாறில் உள்ள பெரிய வீட்டை அவளுடைய பயன் பாட்டிற்குக் 
கொடுத்து விட வேண்டியது!

2. என் மகள் மஞ்சுளாவிற்கு உடைகள் மேல் நீராத பற்று. அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில்  இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து சென்னை பனகல் பார்க்க அருகில் உள்ள பெரிய, பெரிய துணிக் கடைகளில், அவள் விரும்பும் வண்ணத்திற்கு ஆடைகளாக எடுத்துக் 
கொடுத்துவிட வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது.

3. என் மகன் பாலாஜிக்கு, கார்களின் மேல் தீராத மோகம். அவனுக்கு, என் லாக்கரில் உள்ள பணத்தில்  இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து Benz, BMW, Volkswagen Beetle, Nisan Teena, Toyota Land cruiser, போன்று சந்தையில் உள்ளLuxury Car களில் நான்கை வாங்கிக் கொடுத்து விட வேண்டியது. அத்துடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டையும் 
அவனுக்குக் கொடுத்துவிட வேண்டியது.

4. என் மைத்துன ராமசாமி எப்போது பார்த்தாலும் “மனிதனுக்கு ஆரோக்கியம் மட்டுமே தேவை. பணம் முக்கியமில்லை - health is better than wealth!”  என்று சொல்லிக்கொண்டிருப்பான். அவனுக்கு உடற்பயிற்சிக்கு உதவும் treadmill ஒன்றை வாங்கிக் கொடுத்து விடவும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நல்ல treadmill கிடைக்கும். அதற்குத் தேவையான ஐம்பதாயிரம் ரூபாயை என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது!

5. இது தவிர உள்ள எனது சொத்துக்கள் அனைத்தையும், வங்கி டெபாஸிட்டுக்கள் உட்பட, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்குக் (Library) கொடுத்து விட வேண்டியது. அதன் மதிப்பு சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் தேறும். அதை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக்கூடாது.

மெய் சிலிர்க்கவைக்கும் ஆஜீத் பாடல்



சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத்தின்..இப்பாடல் இன்று கேட்டேன்..மறுமுறை..

மெய் சிலிர்க்க வைத்தது..

இது போன்ற ஞானம் அனைவருக்கும் வருவதில்லை..

இயற்கை..அளித்த வரம்..

வாழ்க..வளர்க...இதைத் தவிர ஏதும் சொல்லத் தெரியவில்லை.


விட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்



அண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும்.
எதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால்.

எப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

அதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

ஒரு பிரதேச சபைத் தலைவர் ஐந்து வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக.

கடந்த வாரம், அரசாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த வருடத்தில் மாத்திரம் 1000க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் கிட்டத்தட்ட பாதியளவானவை சிறுவர், சிறுமியர் மீதானவையாம்.
அதிலும் அண்மைய இரு வருடங்களில் இப்படியான வக்கிரங்கள் ஐந்து வீதத்தால் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வேறு.

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?



இந்த செய்திகளை பார்த்தபோது மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன..

இப்படியான வக்கிரபுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை..
மரண தண்டனை வழங்குவது இனி யாராவது இதே தவறை செய்ய எண்ணினால் அச்சுறுத்தும் என்பது சரி தான்.. ஆனால் தவறு செய்தவனுக்கு அது கொடுக்கப் போவது வெறும் சில நிமிடத் துயரத்தை மட்டுமே.
ஆனால் அவனால் சீரழிக்கப்பட்ட அந்த சிறு மொட்டுக்கள்? பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில்? என்ன பரிகாரம்?

இனி எவரும் இந்தக் குற்றங்களை இழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் இப்படியான குற்றங்களுக்கான தண்டனைகள் வீரியம் குறைந்தனவாகவே இருக்கின்றன என்றொரு கருத்து இருக்கிறது.

நேற்று காலை விடியலிலும் நேயர்களிடம் இது பற்றிய கருத்துப் பகிர்வொன்றை நடத்தியிருந்தேன்.

ஒவ்வொருவரும் கொதித்துப் போய்த் தங்கள் கருத்துக்களைக் கொட்டியிருந்தார்கள்.

மரண தண்டனை முதல் பகிரங்க மரண தண்டனை, அவயங்களைத் துண்டித்தல், கல்லெறிந்து கொல்லல் ... மத்திய கிழக்கில் வழங்கப்படும் தண்டனைகள், மாறா வடுக்களை ஏற்படுத்தல், பாலியல் குற்றவாளிஎன்பதை உடலில் தெரியக் கூடிய இடத்தில் பொறித்தல்...
இன்னும் சிட்டிசன் படப் பாணியில் குடியுரிமை பறித்தல் இப்படி பல தண்டனைகள் சொல்லப்பட்டன.

அதில் ஒருவர் நான் மனதில் நினைத்த ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்லியிருந்தார்.
வழங்கப்படும் தண்டனையானது குற்றம் செய்தவருக்கு படிப்பினையாகவும், இனி இப்படியான செயல்களைச் செய்ய எண்ணுவோருக்கு பயம் தருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சமாவது ஆறுதல் தருவதாகவும் அமையவேண்டும்.

உண்மை தான்....


குழந்தைகளை வீட்டிலோ, பாடசாலைகளிலோ அடித்துத் தண்டனை கொடுப்பதே தவறு எனக் கூறும் ஒரு பக்குவப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டே இப்படிப் படுபாதக செயல்களில் ஈடுபடுவர்களைக் கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வருவதில் தவறு இல்லையே 



தண்டனைகள் அச்சப்படுத்தும்.. திருத்தத் தான் தண்டனைகள் என்பது இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை பொருந்தாது.
இந்த மிருகங்கள் எப்படியும் இனித் திருந்தாது. எதிர்காலத்துக்கான இளசுகளை சிதைத்தவர்கள் இனியும் வாழக் கூடாது.

இப்பொழுது கொலையுண்டதால் தான் அந்தக் குறித்த சிறுமியின் விடயம் வெளியே வந்தது.. அதற்கு முதலே ஒரு மாத காலம் இந்தக் கொடூரம் அந்தக் காமுகர்களால் நிகழ்ந்துள்ளது.
இப்படி இன்னும் வெளிவராத கொடூரங்கள் இலங்கையின் எந்தெந்த மூலைகளில் நடந்துகொண்டிருக்கின்றனவோ?
இலங்கையில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு இடங்களிலும் கூட..

பாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதன் அவசியம் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகப் பேசப்படுகிறது.
ஆனால் அதைவிட குடும்ப சூழல் ஆரோக்கியமானதாகவும், நட்புறவு, சகஜபூர்வமாகவும் இருக்கவேண்டியுள்ளது.
குழந்தைகள் தயக்கம், பயம் இன்றி பெற்றோருடன் தங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள், பயன்களைக் கலந்துபேசக் கூடிய சூழல் வரவேண்டும்.
அதற்கு பெற்றோரும் தக்கவர்களாக, தவறுகள் இல்லாதோராக, உதாரணமாகக் கொள்ளக் கூடியோராக நடந்துகொள்ளல் அவசியம்.
எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் மீது யாராவது ஒரு பெற்றோராவது தங்கள் குழந்தையை அக்கறையாக, கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்துக் கவனிக்கவேண்டும்.
காரணம் பெற்றோரின் கவனிப்பு இல்லாத குழந்தைகள் இலகுவாகக் காமுகரிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயம் ஒன்றை சொல்லிக் கொடுங்கள்.
Good touch & Bad touch என்பவை என்னென்ன என்று ஆறுதலாக சொல்லிக் கொடுங்கள்.
பிறரின் தப்பான தொடுகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். கை கொடுத்தல், தலையைத் தடவுதல்/ தொடுதல் தவிர வேறு உடம்பின் பகுதிகளில் பிறர் அனாவசியமாக தொட்டால் உங்களுக்கு உடனே சொல்லச் சொல்லுங்கள்.

அன்னியர் யாராவது தனி இடங்களுக்கு அழைத்தல், தவறாகப் பேசுதல், சந்தேகமான நடத்தையுடன் அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனே உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.

இதெல்லாவற்றையும் விட அன்றாடம் அவர்கள் சந்திக்கின்ற அசாதாரணமான நிகழ்வுகளை மறக்காமல் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

இளம் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான சேஷ்டைகள், வன்முறைகளைக் கூட அவர்களால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியும்..
ஆனால் இந்தப் பிஞ்சுகள், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்?
பெரியவர்களிடம் முறையிடுவதைத் தவிர...
தண்டிப்பதை விட தடுப்பது முக்கியம் என்று கருதும் எம்மவருக்கு அவசியமான முற்காப்பு நடவடிக்கைகள் இவை.

ஆனால் கேவலமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் மகள்மாரையே சிதைத்த தந்தை மார், சிற்றப்பான்மார், மாமன்மார் ஏன் தாத்தாமாரும் இருப்பது தான்..
என்ன கீழ்த்தரமான பிறவிகள்..

எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் யாருக்கும் தெரியாமல் இப்படி பாழாகப் போனது என்று கணக்கெடுப்பு இல்லை.. அவர்களின் மனநிலையும் சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்கால சுமுகவாழ்வு இல்லாமல் போய் ஒரு எதிர்கால சந்ததியே கருக்கப்படும் இந்தப் பாதகத்துக்குக் காரணமானவர்கள் வெளிச்சத்துக்கு வருவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் கையிலுமே தங்கியுள்ளது.

யுத்தகாலத்திலே நடந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களால் எத்தனை பெண்களின் உள்ளமும் உடலும் சிதைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வராமலே போனது போல, குழந்தைகள் மீதான வன்முறைகளும் வெளியுலகுக்குத் தெரியாமலே வந்திருக்கும்.
ஆயுதங்கள் காட்டிய துஷ்பிரயோகம் முடிந்து இப்போது மனதுக்குள் அடங்கியிருக்கும் வக்கிரங்கள் இந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் மீது குடும்ப சூழலுக்குள்ளிருந்தே பாய்வதா?
பாவம் அந்தப் பிஞ்சுகள் விட்டுவிடுங்கள்..

இனி வீதியிலோ, வெளியிலோ, சொந்தக்காரர் அல்லது விருந்தினர் வீடுகளிலோ அழகான, செல்லமான சுட்டிக் குழந்தைகளை நாம் செல்லமாகக் கொஞ்சுவதோ, தட்டிக் கொடுப்பதோ, ஏன் பேசுவதோ கூட தப்பான அர்த்தத்திலும், சந்தேகமான பார்வையோடும் நோக்கப்படலாம்.

எங்கள் குழந்தைகளோடும் இனித் தெரிந்தவர் உறவினர்கள் கூட நெருங்கிப் பழகத் தயங்கும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கப் போகிறது..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இறுதியாக முக்கியமான ஒன்று..
சமூகத்தில் நடக்கும் அத்தனை தவறுகள், இழி செயல்கள், பாதகங்களையும் எங்களால் தடுக்க முடியாவிடினும் குறைந்தபட்சம் குரல் எழுபலாம்..
இல்லாவிட்டால் இப்படியோ சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் மூலம் குமுறலைக் கொட்டித் தீர்த்து சமூகத்துக்கு வெளிப்படுத்தலாம்.
இதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

ஆனால் அதெல்லாவற்றையும் விட எங்களை நாமே தனிப்படத் திருத்திக்கொள்வோம்.
இதனால் உலகில் ஒரு கெட்டவர் குறையலாம்.. சில தவறுகள் நிகழலாமல் போகும்.
இப்படியே சமூகத்தவரின் ஒவ்வொரு அங்கத்தவராகத் தங்கள் குற்றங்களைக் குறைக்க குறைக்க ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகும் இல்லையா?

உணர்வோம்; உயர்வோம்.

என்னமோ நடக்குது இலங்கையிலே..


தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன செய்ய முடியும் எம்மால் என்று வெறும் பெரு மூச்சோடு மட்டும் வாளாவிருப்பவை.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை இலங்கை அரசியல், நாட்டு நடப்புக்களை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.

யுத்தம் முடிந்து முழுமையாக நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் மீள் குடியேற்றம் ஒழுங்காக நடக்கவில்லை..
எத்தனை பேர் எத்தனை விதமாகக் குரல் எழுப்பியும், எங்கெங்கோ இருந்து அழுத்தங்கள் வந்தும் கண் துடைப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மீள் குடியேற்றங்கள் நடந்தனவே தவிர, கட்டாயக் குடியேற்றங்களும், 'தொல் பொருள்' கண்டெடுப்புக்களின்படி புதிய விகாரைகளும் அதனுடன் தொடர்புபட்டவர்களின் குடியேற்றங்களும் தான் சீராக, வேகமாக நடந்து வருகின்றன.

அது சரி, யுத்தம் நடந்து இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஏன் இவ்வளவு பெருந்தொகையானோர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே ஆஸ்திரேலியாவுக்குப் படைஎடுக்கவேண்டும்?
அதுவும் உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம்..
அதிலும் ஆஸ்திரேலியா அண்மைக் காலத்தில் கருணை காட்டவில்லை; கிறிஸ்மஸ் தீவிலும் கொக்கோஸ் தீவிலுமே  செல்வோரை எல்லாம் தடுத்து வைத்துள்ளது என்றும், தெரிந்த பின்னரும் இப்படிப்பட்ட உயிராபத்தான பயணங்களின் அவசியம் என்ன?

தலைக்கு செலுத்தப்படும் தொகை குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய்.
*(ஒரு மாதத்துக்குள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.)

வெற்றிகரமாக கிறிஸ்மஸ் தீவுகளை அடைந்த படகுகளில் (மட்டுமா தெரியாது) சில சிங்களவர்களும் இருந்துள்ளார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

மாதாந்தம் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் இருந்து குறைந்தது இரண்டாயிரம் பேராவது இவ்வாறு படகுகளில் 'ஆஸ்திரேலியா' செல்கிறார்களாம்.
ஏற்கெனவே இலங்கையில் தமிரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில், அத்துமீறிய குடியேற்றங்கள் ஒருபுறம் + இப்படியான இடப் பெயர்வுகள்.

இந்த கடற் பயணங்களும் , கைதுகளும் வலிந்து நடக்கிறதோ? வலிமையான ஒரு பின்னணியோ என்று அந்தப் பிரதேச மக்கள் மட்டுமல்ல நாடு முழுக்க சந்தேகம் இருக்கிறது.
அதற்கேற்பவே ஒன்று விட்ட ஒரு நாள் (அண்ணளவாக) பயணங்களும், படகுகள் கவிழ்வதும், கைதுககுமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு இறுக்கமாகக் கரையோரப் பாதுகாப்பு + கண்காணிப்பு இருந்தும் இப்படியான ஆட் கடத்தல்கள் நடப்பதாக இருந்தால் தரகர்கள், இடைத் தரகர்கள் யார் எனத் தெரியவேண்டுமே.
உண்மைகள் எப்போதாவது வரலாம்...

முன்பொரு காலம் இருந்தது தமிழரின் வீடுகளிலும் அவர்கள் வணங்கும் தெய்வப் படங்களைத் தவிர இன்னும் மூன்று அல்லது நான்கு படங்கள்/ சிலைகள் நிச்சயம் இருக்கும்.
மகாத்மா காந்தி, பாரதியார்MGR , புத்தர்.


புத்தரை எம்மவர்கள் அமைதியின் சின்னமாக, சமயம் கடந்து ஒரு ஆன்மீக அடையாளமாகப் பார்த்து மதித்து வந்தார்கள்.
புத்தர் இன்னமும் மாறவில்லை; ஆனால் அவரை இப்போது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றிவிட்டார்கள்.
எங்கெங்கே புத்தர் சில முளைத்தாலும் இப்போது வணங்குவதை விட, அந்த அமைதி தவழும் முகத்தை ரசிப்பதை விட பயத்தோடு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் எம்மவர்கள்.

அதிலும் சிலைகள் முளைத்துள்ள இடங்களைப் பாருங்கள்....
முதலில் கோணேஸ்வரம் - இப்போது அங்கே மலையேறி ஆலயம் செல்லும் வழியில் ஒரு புத்த வழிபாட்டுத் தலமே பெரிதாக எழுந்துள்ளது
கேதீஸ்வரம்
மடு
கதிர்காமம் எப்பவோ கத்தரகம ஆகிவிட்டது.
அம்பாறையில் முஸ்லிம்கள் & தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் திகவாபி ஆகிவிட்டன.

இது பற்றி தனி மனிதர்களாக, ஊடகங்களாக இன்னமும் செய்திகள், குமுறல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அந்தந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பாது குறைந்துவிட்டது. அலுத்து விட்டார்களோ? அல்லது குரல் எழுப்பினால் குரலே இருக்காது என்று ஏதாவது தகவல்?

போன ஞாயிறு தினக்குரலில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கன்னியாய் வென்னிரூற்றுப் பகுதியில் இருந்த அந்தியேட்டி மேடம் என்ற இந்துக்களின் புனித மடம் ஒன்று  அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக.
கடந்த வருடம் கன்னியாய் சென்ற போதே அங்கே இந்துக்களின் கோவில் கவனிப்பாரற்றுப் பாழ் பட்டுப் போயிருப்பதையும், தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிதைந்து போயிருப்பதையும் கண்டேன். அத்துடன் புத்த விகாரை ஒன்று எழுப்பப்படுவதையும், பௌத்த அடையாளங்கள் புதிதாக முளைப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

நான் சமய அடையாளங்களை அறவே வெறுப்பவன். கடவுள் என்ற ஒன்றையே கணக்கெடுக்காதவன்.
ஆனால் சமயத்தின் அடிப்படையிலேயே இங்கே இனங்களின் எதிர்காலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன எனும்போது பேசாமல் சமயத்தை மீண்டும் பின்பற்றலாமோ என்ற எண்ணமும் வருகிறது.

இங்கே ஆலயப் பகுதிகளும் சூழலும் தானே குறிவைக்கப்படுகின்றன.

திருகோணமலையில் முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தமிழரின், முஸ்லிம்களின் நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டே இருக்கிறது.
ஒருகாலத்தில் - வெகுவிரைவிலேயே இந்த செந்தமிழ் பூமி திருக்கணாமல ஆகிடும் அபாயம் இருக்கிறது.
இவ்வளவுக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஊர்.
சொந்த மண்ணுக்கே இந்நிலை என்றால்???

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் வருவதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

தமிழ் தேசியம், உரிமை, நில ஆண்மை, உரிமைகள் என்பவற்றை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு அல்லது தனித்துப் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தாம் மத்தியில் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துடனே இந்த மாகாண சபையிலும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பிறகு தடாலடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தனித்து, மரச் சின்னத்திலே போட்டியிடுவதாக அறிவித்தது.

தனித்துப் போட்டியிடுவதைத் தான் பெரும்பாலான முஸ்லிம்களும் விரும்புகிறார்கள் என்பது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்த கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாகவிருந்தது.
ஆனால் அடுத்த வெடி உடனே ரவூப் ஹக்கீமிடம் இருந்து.
"தனித்துப் போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் இணக்கத்தோடு தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்று..

இப்போது அரசாங்கப் பக்கம் இருந்து தேர்தலின் பின்னராவது ஆதரவை ஸ்ரீ.ல.மு.கா தங்களுக்குத் தரும் என்று ஒரு கதை பரவவிடப் படுகிறது. ஹக்கீமும் அது போலவே தேர்தலின் பின்னர் இதைப் பற்றித் தீர்மானிப்போம் என்கிறார்.
மதில் மேல் பூனை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுவதாக இல்லை.
இணக்கத்தோடு உரிமைகளை வெல்வோம் என்கிறது.


அதாவது தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதரவு தருமாறு..

(தமிழ் பேசுபவர் ஒருவர் தான் முதலமைச்சர் என்பது நிச்சயம். அவர் தமிழரா முஸ்லிமா என்று ஒரு சர்ச்சை சண்டை வராது என்று நம்புவோம்.)


இதுவரை தேர்தல்கள் மட்டும் தான் வெல்லப் பட்டுக்கொண்டிருக்கின்றன; உரிமைகளை நாம் அனைவருமே தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

குடை - மழை - குளிர் காய்தல்


குடை - மழை - குளிர் காய்தல்  



இல்லாத நேரம் இருக்கிறதைத் தேடிப்பிடித்து 
கிடைக்கிறதைப் பெற்றுய்ந்து 
பாவம், புண்ணியம் துரோகம் பாராது 
அது மாறாது இது மாறாது என்பது..
மாற்றம் ஒன்றே மாறாதது 
இதுவே கடைசி - அன்று சொன்னது 
இன்று???

ஆழ் மனது அறிவிப்பது அப்படியே நடக்கிறது 
அவன் - இவன் அப்பிடித் தான் - இப்பிடித் தான் 
எல்லாம் அப்படியே தான்...

மனதுகளை முகம் பார்த்தோ, முகங்கள் பார்க்காமலோ 
வாசிக்க முடிகிறது 

நீ செய்த முன்வினை 
மீண்டும் உனக்கே என்பது விதி 

இனி எல்லாம் நல்லபடி.. 
நம்புங்கள் நடக்கும் 
கடைசி வாய்ப்பு..
எத்தனை கேட்டாச்சு.. 
நம்பித்தானே இவ்வளவு காலமும் 

நம்பிக்கை எல்லாம் இங்கே சும்மா சம்பிரதாய வார்த்தை 
உறுதிமொழிகள் எல்லாம் உயிரும் உணர்வும் இல்லாதவை 

பிரதியீடுகள் மலிந்துபோன காலம் இது..

கோக் இல்லாவிட்டால் பெப்சி..
wifi இல்லாவிட்டால் 3G

ஒரே நேரத்தில் பலரோடு.. 
ஒரே நேரத்தில் பலராய்.. 
சீ... எப்படி முடிகிறது?

குற்றவாளி அவனே.. 
அவனே தான்.. 

ஆனாலும் திருந்துவான் ?? 
ம்ஹூம்...

மழைநேரம் குடை போல இவன்... 
நனைவான்.. 
வெயில்நேரம் குடைபோல இவன்..
காய்வான்.

தேவையான நேரங்களில் இவன்.... 

போகட்டும் காலம்... 

பாரதி - 12-12-12 - ரஜினி


பாரதி


கவிதை - தமிழ் - பாடல் இவை மூன்றையும் நேசிக்கச் செய்த என் அன்புக்குரிய பாரதியின் பிறந்தநாள் நேற்று.

வழமையாக வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி செய்கின்ற வாய்ப்பு இம்முறை இல்லாமல் போனாலும், காலையில் Dialog தலைப்பு செய்திகள் வாசிக்க எழுந்த பொழுதிலிருந்து, மனதுக்குப் பிடித்த பாரதி கவிதைகளை வாசித்து, நயந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பாரதி கவிதைகளை முழுமையாகத் தேடும் நண்பர்களுக்கு நான் வாசித்த வரையில் தவறுகள், எழுத்துப் பிழைகள் இல்லாத ஒரு இணையப் பக்கம் கிடைத்தது.
உங்களோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாரதியை இன்னும் பலருக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க....

மகாகவி பாரதியார் கவிதைகள்

(வேறு இணையத் தளங்கள் இருந்தாலும் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறியத் தாருங்கள் நண்பர்களே)

பாரதி என்பவனை பாடல்கள், கவிதைகள் மட்டுமே எழுதிய ஒருவனாக எண்ணுகின்ற எம்மிற் பலர் உள்ளார்கள். அவர்களில் தப்பில்லை....
பாரதியின் கட்டுரைகளை பதிப்பித்தவர்களோ, வாசித்துப் பகிர்ந்தவர்களோ ஒப்பீட்டளவில் குறைவு தானே?
இணையத்தில் பாரதி கட்டுரைகளைத் தேடியவேளையில் கிடைத்த அரிய தளம் ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் திருப்தி.

பாரதியார் கட்டுரைகள்


தமிழை பண்டிதரிடமிருந்து பாமரருக்குக் கொண்டுசென்று சேர்த்த முதலாமவன் என்ற பெருமையுடன், எமது எதிர்காலத் தலைமுறைக்கும் தமிழைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவும் பாரதி கவிதைகள் & பாடல்கள் ஒரு மிகச் சிறந்த ஊடகம் என்று மனமார நம்புவதால், பெருமையுடனும் பூரிப்புடனும் பாரதியை மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

--------

12-12-12


இப்படியான வித்தியாசமான எண் கோலங்கள் திகதிகளாக வரும்போது அதில் கிளர்வும், அதிசயமும் காணும் பலர் எம்மில் இருக்கிறோம்.

1900களில் இருந்து 2000 என்பதற்குள் பயணித்த வாய்ப்புடையவர்கள் என்பதால் எமக்கு இப்படி பல எண் கோலங்களைப் பார்த்து சுவாரஸ்யப்படும் வாய்ப்புக் கிடைத்தது.

இன்றைய திகதி போல இன்னொரு திகதி இன்னும் நூறு வருடத்துக்கு வராது (12-12-2112) என்று சிலரும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தான் வரும் (12-12-3012) என்று சிலரும் வேறு சண்டை.

இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளுமே போனால் வராது.. இதை மட்டும் ஏன்டா கொண்டாடுறீங்க என்று சலித்துக்கொள்ளும் சிலரையும் Facebook மூலைகளில் கண்டேன்...

எவ்வளவோ விஷயங்களை அர்த்தமே இல்லாமல் கொண்டாடும் எமக்கு இது மட்டும் பெரியதொரு விஷயமா? கொண்டாடி குஷிப்படுபவர்கள் கொண்டாடிட்டுப் போகட்டுமே..

ஆனால் பாருங்கள், இந்த முறை மட்டும் இந்த அதிசயமான திகதியில் கொஞ்சம் நடுக்கமும் சிலருக்கு.

மாயன் கலண்டர், உலக அழிவு பற்றிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் உலக மாந்தருக்கு, இந்தத் திகதியும் பயம் தருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே...
இன்றைய நாளையே உலகத்தின் இறுதி நாளாகக் கருதும் பலரும் இருக்கிறார்களாம்.


12/12/12 Is it the end?



மாயன் கலண்டரில் உலக அழிவு நாளாக சொல்லப்பட்டிருப்பது 2112-2012.
அதாவது அவர்களது 5125 வருடங்கள் நீண்டு செல்லும் நாட்காட்டி அந்தத் திகதியுடன் முடிகிறது.

(புது வருஷத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு தயாராகும் என்னைப் போன்றவர் எல்லாம் என்ன செய்வது? )

இது பற்றி சில வருடங்களாகவே....
உலகம் அழியப் போகிறது.... இதோ வருகிறது உலகத்தின் இறுதிநாள்.
இப்படியான பரப்புரைகள், பதற்றங்கள் ஒரு பக்கம்...
இதன் மூலமான மதம் சார்ந்த பிரசாரங்கள் ஒரு பக்கம்..
உலகம் அழியுமா அழியாதா என்ற வீண் வாதங்கள், விவாதங்கள் இன்னொரு பக்கம்...

என்று ஒரே அலம்பல்களும், அழிச்சாட்டியங்களும்..
அதை விட இப்போது சில நாட்களாக, Twitter, Facebook, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள், ஏன் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், sms வழியாகவும் பயமுறுத்தல்களும், கேள்விகளும்...
முடியலடா..

கலண்டர், டைரி விற்பனை கூட இம்முறை மந்தமாம்..
இவங்கல்லாம் 21ம் திகதிக்குப் பிறகும் உலகம் இருந்தால் என்ன செய்யப் போறாங்க?

அண்மையில் இது பற்றித் தேடி வாசித்த சில ஆராய்ச்சி விஷயங்களை - இவை பயமுறுத்தல்கள்- பினாத்தல்களாக இல்லாமல் - பல்வேறு கோணங்களில் தேடி எழுதப்பட்ட விடயங்களாக இருப்பதனால் - உங்களோடும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.



அடுத்து தமிழில் இது பற்றிய முழுமையான ஒரு ஆராய்ச்சியாக ஒரே கட்டுரையை/ தொடர் கட்டுரையை அவதானித்தேன்.
 ராஜ் சிவா உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது.


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் 



என்ன ஆச்சரியம் என்றால், முன்பு வானொலியில் வியாழக்கிழமைகளில் நேயர்கள் கேள்விகளைக் கேட்டு என்னிடம் பதிலைத் தேடித் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் வாராந்தம் ஒரு மூன்று பேராவது கேட்கும் ஒரு கேள்வி தான்
"உலகம் இந்த வருடத்துடன் அழியுமா?"

அதற்கு நான் சிரித்துக்கொண்டே சொல்லும் பதிலைப் போன்ற ஒரு பதிலைத் தான் ராஜ் சிவா அவர்களும் கொடுத்துள்ளார்கள்..

"22ம் திகதி ஒரு தேநீர் விருந்தில் சந்திக்கலாமே"

அழிந்தாலும் தனியே நீங்களோ நானோ மட்டுமே போகப் போறதில்லையே? எல்லாரும் எல்லாமும் சேர்ந்து தானே? அதுக்கெல்லாம்  போய் அலட்டிக் கொள்ளலாமா?
வாழும் வரை நல்லபடியா வாழ்ந்திட்டுப் போகலாம்...

நாசாவே சொன்ன பிறகு நான் வேறயா?
அதெல்லாம் ஒன்னும் அழியாது.. போய்ப் பிழைப்புக்களைப் பாருங்கய்யா...



ரஜினி



63 வயது - நடிக்க வந்து 36 வருடங்கள்...
பேரனும் பாடசாலை செல்ல ஆரம்பித்துவிட்டான்.
தலையில் நரையுடன், வழுக்கை..
சுருங்கிப்போன தேகத் தசைகள்.
பெரிதாக அழகென்றும் சொல்ல முடியாது.

ஆனால் இன்றும் பாடசாலை மாணவரும் கூட இவரை ரசிக்கிறார்கள்...
என் வீட்டில் எனது ஐந்து வயது மகனுக்கும் இவரது படங்கள் பிடிக்கிறது.

இவரது அடுத்த படத்தை எதிர்பார்க்கும் கூட்டமும், இந்தக் கால இளைய நடிகர்களுக்கே இல்லாத வசூல் நம்பிக்கையும் இவர் மேலே...
காரணம் - ஏதோ ஒரு ஈர்ப்பு.... அந்த ஸ்டைல் , screen presence அதையெல்லாம் தாண்டிய எளிமை.

நான் ரஜினி ரசிகன் இல்லை.. ஆனாலும் ரஜினியை அவருக்கென்று பொருந்தும் பல ரசனையான இடங்களில் ரசித்திருக்கிறேன். (சில இடங்களில் விமர்சித்திருந்தாலும்)

இன்னொரு பக்கம் ஒரு தனிமனிதனாக  தன்னம்பிக்கையோடு முன்னேறி, ஏறிய  ஒரு வெற்றிகர உழைப்பாளியாகவும் ரஜினியை மிக மதிக்கிறேன்.
சினிமா ஹீரோக்களுக்கான இலக்கணம் என்று சொல்லப்படும் (சொல்லப்பட்ட என்பதே பொருத்தம்) எதுவும் அற்ற சிவாஜிராவ் தன்னை வளர்த்து வளப்படுத்தி இன்று தன்னை ஒரு மைல் கல்லாக இப்போதைய ஹீரோக்களுக்கு உருவாக்கிவைத்திருப்பது வாழ்க்கைக்கான நம்பிக்கை தானே?

ரஜினியின் சில அரிதான படங்களைத் தொகுத்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் இடுகைகளாக எனது படங்கள், காணொளிகளை பதிவேற்றும் வலைப்பதிவில் தந்துள்ளேன்.

கும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2


கும்கி


மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம்.
காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன.

ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் ரசிக்கவைக்கும் அந்த சூட்சுமம் இசையமைப்பாளர் இமானுக்கு அண்மைக்காலத்தில் தெரிந்திருக்கிறது.
இந்த கும்கி பாடல்களையெல்லாம் கேட்கும்போது மனதில் ஒரு ரசனை கலந்த பிழியும் உணர்வு.

மலை வாழ் மக்களின் நீண்ட காலப் பாரம்பரியமும் அமைதியும் கலந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் தம் விவசாயத்தையும் சுமுக வாழ்க்கையையும் ஒரு மூர்க்கமான கொம்பன் யானை கெடுக்கிறது. அரசாங்க, போலீஸ் உதவிகள் இல்லாமல் இருக்கும் அவர்கள் தாங்களாகவே பணம் சேர்த்து காட்டு யானையை விரட்டும் 'கும்கி' எனப்படும் யானையைத் தங்கள் கிராமத்துக்கு வரவழைக்கிறார்கள்.

அந்த கும்கியின் பாகன், அந்த யானை மேல் பாசத்தைக் கொட்டி வளர்க்கும் இளைஞன் பிரபு விக்ரம்.
கிராமத் தலைவரின் மகள் மீது கண்டதும் காதல்...
ஆனால் அவளோ அது பற்றி உணராமலே யானை மீது மட்டும் பாசம் வைத்துத் திரிவது அவ்வளவு அந்தக் காதலை எங்களை ரசிக்கச் செய்யவில்லை.
இதனால் நாயகனின் காதல் உருக்கம் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.

ஒளிப்பதிவு தான் படத்தின் ஹீரோ. ஆரம்பம் முதல் சிலிர்க்கவும் ரசிக்கவும் உருகவும் பிரமிக்கவும் வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இயற்கை அழகை இவரது கமெரா காட்டியது போல அண்மைக்காலத்தில் வேறு எந்தப் படத்திலும் பார்த்து ரசித்த ஞாபகம் இல்லை.

அதிலும் பாடல் காட்சிகளில் துல்லியமும், பிரமாண்டமும் அற்புதம்.
சொல்லிட்டாளே பாடலில் காட்டப்படும் அருவி, மலையுச்சி அப்படியொரு அழகு. அந்த ஒளிப்பதிவில் தொலைந்த மனது இன்னும் அதைச் சுற்றியே... உடனடியாக ஒரு இறுவட்டு வாங்கி மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இயக்குனர் பாடல்கள், ஒளிப்பதிவில் கிடைத்த பலன்களை எல்லாம் கதை சொல்லும் விதத்தில் தவற விட்டுவிட்டார்.
படத்தின் முக்கிய விஷயமாக ஆரம்பம் முதல் சொல்லப்படும் கொம்பன் யானையின் கோரத் தாக்குதலைப் பற்றி பெரிய Build up கொடுத்துவிட்டு, கடைசி யானைச் சண்டையை கொமெடியாக்கி விடுகிறார்.

கிராமியப் பண்டைப் பாரம்பரியம்,  யானைப் பயிற்சி, தம்பி ராமையாவின் கொஞ்சம் நகைச்சுவை, நிறையப் புலம்பல் என்று அலையும் பகுதிகள் என்று அலையும் கதையில் இயக்குனர் படமாக்குவதில் தடுமாறியிருக்கிறார் என்று புரிகிறது.
ஆனால் மைனாவில் தந்த அதிர்ச்சியான முடிவைப் போலவே துணிச்சலான முடிவு ஒன்றை கும்கியிலும் தந்திருப்பதற்கு  இயக்குனருக்கு வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும்.


அறிமுகம் பிரபு விக்ரமிடம் பரம்பரை அலகுகள் செறிந்து இருக்கின்றன. தேவையான அளவு நடித்திருக்கிறார். நடிகர் திலகம், பிரபு இருவரதும் சாயல்கள், கண்கள், மூக்கில் தெரிகின்றன.
ஏற்கெனவே சுந்தரபாண்டியனில் அறிமுகமான லக்ஷ்மி மேனன் புதிய ஆரோக்கியமான கண்டுபிடிப்பு.
கிராமத் தலைவராக வரும் நடிகரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

காட்சிகள் கவர்ந்த அளவுக்குக் கதையும் திரைக்கதையும் மனதில் ஒட்டவில்லை.

கும்கி - கண்ணுக்குக் குளிர்ச்சி

------------------------

பிட்சா


தமிழில் திகில் படங்கள் வருவது மிகக் குறைவு என்று குறைப்படும் ரசிகர்களில் ஒருவரா நீங்கள்? உங்களுக்கான திகில் த்ரில்லர் பிட்சா.
திரையரங்கு ஒன்றில் தனியே இருந்து இந்தப்படத்தைப் பார்த்தால் நீங்கள் கெட்டிக்காரர் தான்.
நாங்கள் பார்த்த மாளிகாவத்தை ரூபி (திருத்திக்கட்டி A/Cயும் போட்டுள்ளார்கள்) திரையரங்கிலும் அன்று எம்முடன் சேர்த்து இருந்தவர்கள் இருபதுக்கும் குறைவே.

அதில் வேடிக்கை முன் இருக்கைகளில் தனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் அவசர அவசரமாகக் கொஞ்ச நேரத்தின் பின்னர் பின்னால் வந்து அமர்ந்துகொண்டார்கள்.

விசில் படத்துக்குப் பிறகு (காஞ்சனா, முனி எல்லாம் சில காட்சிகளில் தானே) ஒரு தமிழ்ப்படம் முழுமையாகப் பயமுறுத்துகின்ற அளவுக்குக் காட்சித் தொடர்ச்சியோடும், படத்தோடு ஓட்டிச் செல்லும் கதையோடும் வந்துள்ளது என்றால் அது பிட்சா தான்.

முன்னர் கலைஞர் TV யின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இப்படத்தைக் குறும்பட வடிவில் பார்த்த ஞாபகம். யாராவது உறுதிப்படுத்தி சொன்னால் நல்லது...

பிட்சா கடையொன்றில் Delivery boy ஆகக் கடமையாற்றும் இளைஞன் மைக்கேல், அவனோடு வாழும் அவன் காதலி (திருமணமும் செய்கிறான்) - இவளுக்கு அமானுஷ்ய விஷயங்கள், பேய் பற்றி ஆராய ,வாசிக்க விருப்பம், அந்த பிட்சா கடை முதலாளி, அங்கே பணிபுரியும் இருவர் என்ற வட்டத்தில் நிற்கும் கதை, மைக்கேல் ஒரு இரவில் தனியான பங்களா ஒன்றுக்கு பிட்சா கொடுக்கச் செல்லும் நேரம் இடம்பெறும் சம்பவங்களுடன் திகிலாகிறது.
முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் கதை இடைவேளையின் பின்னர் எடுக்கும் வேகமும் அத்தோடு சேர்ந்து திகிலுமாக படத்தோடு ஓட்ட வைக்கிறது.

அளவான பட்ஜெட்டில் படம் முழுக்க பிரமிக்க வைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இவரது இளமைக் கூட்டணி (இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், எடிட்டர் லியோ ஜோன் போல்) கலக்கியிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி, அல்லது பயமுறுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், நிறைவான ஒரு கதையைத் தந்து ரசிக்கிற விதத்தில் பயமுறுத்தியதற்கு வாழ்த்துக்கள்.


நடிகர்களில் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இயல்பான நடிப்பால் கவர்ந்துவரும் விஜய சேதுபதி இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். (அடுத்து இவரது நடுவில சில பக்கத்தைக் காணோம் பார்க்கணும்)

குள்ளநரிக் கூட்டம் மூலமாக மனத்தைக் கொள்ளையடித்த ரம்யா நம்பீசன், நிறைவாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். ரசிக்கவைப்பது போல நடித்தும் இருக்கிறார். இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் வரவேண்டுமே...

ஆடுகளம் நரேன் - ஜெயப்பிரகாஷ் அண்மைக்காலத்தில் பல்வேறு பாத்திரங்களில் கலக்கி வருவது போல இந்த நரேனும் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வெளுத்து வாங்கி வருகிறார்.

அந்த நித்யா யாரப்பா? அந்தக் கண்களும் பார்வையும்... பெயரைக் கேட்டாலும், அந்த பங்களாவை நினைத்தாலும் லேசா மயிர்க் கூச்செறிகிறது.

காட்சிகள் சிலவற்றை அதிகமாக ரசித்தேன்... குறிப்பாக சேதுபதியும் ரம்யாவும் அமர்ந்திருந்து பேசும் அறைக் காட்சிகள்... காதல் பேசுகையில் லைட்டிங், கமெராக் கோணங்களும், பின்னர் அமானுஷ்ய விஷயங்கள் பேசுகையில் மாற்றங்களும் கலக்கல்.
அந்த பங்களாக் காட்சிகளின் பயமுறுத்தல்களுக்கும் கமெரா, இசையோடு எடிட்டிங்கின் நுட்பத்தையும் லாவகமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர்.
அத்துடன் ஒரு காதல் பாடல் கதையோட்டத்துடன் செல்லுகையில் சற்றே மெதுவாக இருந்தாலும் ரசிக்கலாம்.

தெளிவான கதையோட்டம், திடீர் திருப்பங்கள், அளவான பாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு, படைப்பு என்று குறைந்த பட்ஜெட்டில் வெற்றியையும் அள்ளி, பாராட்டுக்களையும் அள்ளி எடுத்துள்ள பிட்சா குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இது போன்ற ஆரோக்கியமான படைப்புகளை நாளை பிறக்கும் 2013இலும் நாம் எதிர்பா